முக்கிய செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது

Mettur-dam--2021-09-10

Source: provided

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டு, அஞ்செட்டி, நட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, மாரண்டள்ளி உள்பட பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தற்போது மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நேற்று காலை நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஏற்கனவே குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 251 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 37 ஆயிரத்து 162 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீரும், கால்வாயில் 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 102.79 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மேலும் 2 அடிக்கு மேல் உயர்ந்து 105.14 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து