முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் திடீர் மரணம் : பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 29 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கன்னட திரையுலகினர்   இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாக இருப்பவர் புனித் ராஜ்குமார் (வயது 46). இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். கன்னட திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் புனித் ராஜ்குமார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் புனித் ராஜ்குமார். இவர் 29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். புனித் ராஜ்குமார் 1975ல் சென்னையில் பிறந்தவர். ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக 'யுவரத்னா' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 'ஜேம்ஸ்', 'த்வித்வா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

நேற்று காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புனித் ராஜ்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன், அங்கு ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது. ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மறைவு செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நடிகர் புனித் ராஜ்குமார் காலமானதை முன்னிட்டு பெங்களூரு நகரில் பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். அரசியல் கட்சியினர், உறவினர்கள், சக நடிகர்கள் மற்றும்  தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மருத்துவமனைக்கு விரைந்ததால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. புனித் மறைவையொட்டி கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது., விதியின் கொடூரமான முடிவு, திறமையான நடிகர் புனித் ராஜ்குமாரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது. இது இறப்பதற்கான வயதே அல்ல. அவரது பணியை, அற்புதமான ஆளுமை வரும் தலைமுறைகள் அன்போடு நினைவுகூர்வார்கள். அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து