முக்கிய செய்திகள்

20 துணைமின் நிலையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      தமிழகம்
CM-1 2021 11 24

சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 517 கோடியே 39 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மேலும்,  39 துணை மின் நிலையங்களில்  712 எம்.வி.ஏ. அளவிற்குத் திறன் அதிகரிக்க  141 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள   40 எண்ணிக்கையிலான திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினையும் அவர் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் எவ்வித தடையுமின்றி மின்சாரம் கிடைக்கச் செய்யும் நோக்குடன், அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்றவாறு தற்போது உள்ள மின்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டும், தரம் உயர்த்தப்பட்டும் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டும் வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின் பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, தேவைப்படுகின்ற உச்சபட்ச மின்தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சரியான மின் அழுத்தத்துடன் கூடிய சீரான மின்சாரத்தை வழங்கிடவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கூடுதல் துணை மின் நிலையம் அமைப்பது சீரான மின் விநியோகத்திற்கு அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைகேற்ப புதிய மற்றும் தரம் உயர்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் / மின்மாற்றிகளின் திறன் அதிகரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில்,  திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துவாக்குடி, சென்னை மாவட்டம் – மாம்பலம் (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்), திருப்பத்தூர் மாவட்டம் – திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 357 கோடியே 98 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 230 கி.வோ துணை மின் நிலையங்கள்,   

சென்னை மாவட்டம் – புளியந்தோப்பு  (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்), செங்கல்பட்டு மாவட்டம் – நல்லம்பாக்கம் (விகிதாசார அறிமுகம்), கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஈருடையாம்பட்டு, தூத்துக்குடி மாவட்டம்- சன்னதுபுதுக்குடி (விகிதாசார அறிமுகம்), திருவண்ணாமலை மாவட்டம் – வெம்பாக்கம் (விகிதாசார அறிமுகம்),  திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மேட்டுப்பட்டி (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்) மற்றும் வேங்கைமண்டலம் (விகிதாசார அறிமுகம்) ஆகிய இடங்களில் 84 கோடியே 76 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள  ஏழு 110  கி.வோ துணை மின் நிலையங்கள், 

செங்கல்பட்டு மாவட்டம் – வேதாச்சல நகர் (வெளிப்புற ஆளில்லா துணை மின் நிலையத்தை உட்புற ஆளுள்ள துணை மின் நிலையமாக மாற்றுதல்), காஞ்சிபுரம் மாவட்டம் – காவனூர் (உட்புற துணை மின் நிலையம்), திருமுடிவாக்கம் (உட்புற துணை மின் நிலையம்), கிருஷ்ணகிரி மாவட்டம் –மரிக்கம்பள்ளி, ராணிப்பேட்டை மாவட்டம் – அரக்கோணம் (ஆளில்லா துணை மின் நிலையத்தை ஆளுள்ள துணை மின் நிலையமாக மாற்றுதல்), சேலம் மாவட்டம் – பூமனூர், தஞ்சாவூர் மாவட்டம் – திருநீலக்குடி, திருவள்ளூர் மாவட்டம் – அடையாளம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் – அரட்டவாடி, பெரம்பலூர் மாவட்டம் – கூடலூர் ஆகிய இடங்களில் 74 கோடியே, 62 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பத்து  33  கி.வோ துணை  மின் நிலையங்கள் என மொத்தம் 517 கோடியே  39  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  20  துணை மின் நிலையங்களை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், அரியலூர் மாவட்டம் - அரியலூர், செங்கல்பட்டு மாவட்டம் – இராமாபுரம், சென்னை மாவட்டம் – அன்னை நகர் மற்றும் கிண்டி, கடலூர் மாவட்டம் – சித்தரசூர் மற்றும் பி.முட்லூர், திண்டுக்கல் மாவட்டம் – கள்ளிமந்தையம் மற்றும் வத்தலக்குண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் – பழையசீவரம், வையாவூர், முசரவாக்கம், குன்னவாக்கம், பூணிமாங்காடு, சிறுசேரி, திருமுடிவாக்கம் மற்றும் தாமல், கள்ளக்குறிச்சி மாவட்டம் – கள்ளக்குறிச்சி மற்றும் காரணைபெருச்சானூர், கன்னியாகுமரி மாவட்டம் – கருங்கல், கரூர் மாவட்டம் – வேப்பம்பாளையம் மற்றும் பஞ்சப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் – சூசூவாடி மற்றும் குருபரப்பள்ளி, இராமநாதபுரம் மாவட்டம் – கமுதி, சேலம் மாவட்டம் – கே.ஆர். தோப்பூர், தேனி மாவட்டம் – வண்ணாத்திப்பாறை, திருவாரூர் மாவட்டம் – பேரளம், கப்பல் நகர், உள்ளிக்கோட்டை மற்றும் மன்னார்குடி, திருவள்ளூர் மாவட்டம் – திருமழிசை, திருவள்ளூர் மற்றும் பண்டி காவனூர், திருநெல்வேலி மாவட்டம் – மேலப்பாளையம், திருப்பூர் மாவட்டம் – கருவலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – குணசீலம், தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம், விழுப்புரம் மாவட்டம் – திருப்பாச்சனூர், விருதுநகர் மாவட்டம் – காரியாப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 39 துணை மின் நிலையங்களில் 712 எம்.வி.ஏ. அளவிற்கு திறன் அதிகரிக்க 141 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 எண்ணிக்கையிலான திறன் மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேற்கண்ட 659 கோடி  ரூபாய் மதிப்பீட்டிலான  மின்திட்டங்கள் மூலம்  பகுதி வாழ் மக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு தரமான,  தடையில்லா மின்சாரம் வழங்க  வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர்  எஸ்.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து