முக்கிய செய்திகள்

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      இந்தியா
Union-Cabinet 2021 11 24

மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் புறநகர் எல்லைகளில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, இந்த 3 சட்டங்களையும் உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவித்தார்.

வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வரும் 29-ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்த தொடர் தொடங்க இருப்பதால், அதில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையொப்பமிட்டபின், முறைப்படி இந்த 3 சட்டங்களும் திரும்பப்பெறப்பட்டதாக அரசாணை வெளியிடப்படும். இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்ப ப்பெறும் மசோதாக்கள் உள்ளிட்ட 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து