முக்கிய செய்திகள்

மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      தமிழகம்
CM-3 2021 11 23

மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களை அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான 2 காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகர்ந்து வந்ததால் தமிழ்நாட்டில் இடைவிடாது மழை கொட்டியது. அவை இரண்டுமே சென்னை அருகே கரையை கடந்தன. இதனால் அப்போது மிக பலத்த மழை கொட்டி தமிழகம் எங்கும் வெள்ளக்காடாக மாறியது. ஆறு, ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டது. அனைத்து பெரிய ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது.

இதன் காரணமாக பல இடங்களில் மழை மற்றும் வெள்ளச்சேதங்கள் ஏற்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் அடிப்படையில் பாதிப்புகள் கட்டுக்குள் வந்தன. இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் மேல் பகுதியில் அதிக மேக கூட்டங்கள் திரண்டு மேலடுக்கு சுழற்சி நடந்து வருகிறது. இது தெற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும் என்று கூறி இருக்கிறார்கள். அது வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும் சொல்லி உள்ளனர். இதன் காரணமாக இன்று (25-ம் தேதி) முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் மற்றும் தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா கூறி இருக்கிறது.குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளனர்.

ஏற்கனவே 2 காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அதிக மழை பெய்து வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன. இப்போது உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் மிக அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதால் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் பேசினார். அப்போது மழை சேதத்தை தடுக்க என்னென்ன முன்எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த மாதிரி மீட்பு பணிகளை செயல்படுத்த வேண்டும், என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

வெள்ளம் ஏற்பட்டால் அதில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டு வரவேண்டும். அவர்கள் தங்குவதற்கு உரிய இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

மழை நீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள், ஆறு, ஓடைகளில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆகியவற்றால் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து அந்த இடங்களில் மீட்பு குழுக்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். தேவையான இடங்களில் மணல் மூட்டைகள் மற்றும் மீட்பு சாதனங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் என்னென்ன முன்ஏற்பாடுகளை செய்து இருக்கிறீர்கள் என கேட்டறிந்து அவற்றை ஆய்வு செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து