முக்கிய செய்திகள்

வரும் நவம்பர் 29-ம் தேதி டெல்லிக்கு 30 டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி: ராகேஷ் டிகைத் தகவல்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      இந்தியா
Rakesh-Dikait 2021 11 24

வரும் நவம்பர் 29-ம் தேதி டெல்லியை நோக்கி 30 டிராக்டர்களில் 500 விவசாயிகள் பேரணியாக வருவார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.

2020 செப்டம்பரில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் பனியிலும் மழையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஓராண்டுக்குப் பிறகு, மத்திய அரசின் புதிய சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். சமீபத்திய தேர்தலின் தோல்விகளையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் தேர்தல்களையும் மனதில்கொண்டே மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

தற்போது வரை மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று வாய்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் வாபஸ் குறித்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத் கூறுகையில், ‘‘விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான எம்எஸ்பி உத்தரவாத சட்டம், விதை மசோதா, பால் கொள்கை போன்ற பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாததால் போராட்டம் நிறுத்தப்படாது. அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையெனில் நாங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டோம்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத் கூறியதாவது., ''குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டத்திற்கான எங்கள் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவோம், அதன்பின்னரே நாங்கள் வீட்டிற்குச் செல்வோம்.

ஜனவரி 26ம் தேதி வரை டெல்லி எல்லையில் தங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. போராட்டத்தின் போது உயிரிழந்த 750 விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் எம்எஸ்பி வழங்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், நாங்கள் வீடு திரும்புவோம்.

நவம்பர் 29-ம் தேதி 500 விவசாயிகள் 30 டிராக்டர்களில் டெல்லியை அடைவார்கள். மத்திய அரசால் சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் நடத்தத் தொடங்கியதன் முதலாம் ஆண்டு நினைவு நாளைக் குறிக்கும் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு இது தொடர்பான பிற விவரங்கள் வெளியிடப்படும்.

பாஜகவுக்கு எதிரான தேர்தல் பிரசாரம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முன்மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகே, பாஜவுக்கு எதிராக தேர்தலில் பிரசாரம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது, ​​அரசு செயல்படுகிறது, அதை செய்யட்டும்'' இவ்வாறு ராகேஷ் டிகைத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து