முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்து 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் புதிதாக சேர்ந்து உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.வழக்கமாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 66 லட்சமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் அது 77 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று (நேற்று) முதல் விருப்ப மனு அளிக்கப்படுகிறது. வருகிற 30-ம் தேதி வரை மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழையின் காரணமாக வேளாண் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. முதல்வர், கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமைத்த குழு அதன் சேத அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும் மத்திய குழுவினரும் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அளவுக்கு முதல்வர் நிச்சயமாக நிவாரணம் வழங்குவார். நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்து 85 ஆயிரம் மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து உள்ளார்கள்.

வழக்கமாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 66 லட்சமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் அது 77 லட்சமாக உயர்ந்துள்ளது. பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து மாணவ-மாணவிகளை காப்பாற்றுவது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உள்ளேன்.

பள்ளிக்கூடங்களின் புகார் பலகைகளில் அவசர தொலைபேசி எண்கள் மற்றும் அந்தப் பகுதி காவல் நிலையங்களில் போன் நம்பர்களையும் சேர்த்து எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உளவியல் ரீதியான கவுன்சிலிங் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் தேவைப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகள் திறப்பது பெரும் சிரமமாக இருந்தது. திறந்த பின்னர் மழையின் காரணமாக பள்ளிக்கூடங்களை இடைவிடாமல் கொண்டு செல்ல இயலவில்லை. பள்ளிக்கூடங்கள் அனைத்தும் தினமும் இயங்க தொடங்கும் சூழலில் மேற்கண்ட உளவியல் கவுன்சிலிங் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் பாலியல் ரீதியிலான புகார் எண் சரியாக செயல்படுகிறதா? என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து