முக்கிய செய்திகள்

தேசிய பூமராங் போட்டி: 16 மாநிலங்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      விளையாட்டு
National-competition--2021-

ஓசூரில் இந்திய வளரி (பூமராங்) சங்கம் சார்பில் தேசிய அளவிலான வளரி விளையாட்டுப் போட்டிகள் ஓசூர் அதியமான் கல்லூரி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தமிழர்களின் வீர விளையாட்டான இந்த வளரி விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உட்பட 16 மாநிலங்களில் இருந்து 15 வயதுக்குட்பட்ட ஜூனியர் பிரிவு மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட சீனியர் பிரிவுகளில் 62 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் துரிதப்பிடி தந்திர வீச்சு மற்றும் பொறுமைப் பிடி தந்திர வீச்சு என ஆறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இரண்டாம் நாள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 16 பேர் வெற்றி பெற்றனர். பரிசளிப்பு நிகழ்வில் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் பங்கேற்று ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களுக்கும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த தேசிய அளவிலான வளரி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான வளரி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

அஜின் ரஹானே குறித்து  கவுதம் கம்பீர் விமர்சனம்

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியல் கேப்டன் விராட் கோலி தலைமைக்குப் பதிலாக துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பின் இந்திய அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

இந்திய அணியின் கேப்டன் ரஹானேயின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக இருந்து வருகிறது. ஏதோ அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர் அணியில் நீடிக்க முடிகிறது. ஒருவேளை ரஹானே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதால்தான் அணியில் நீடிக்கிறார் என நினைக்கிறேன். இங்கிலாந்து தொடரிலேயே ரஹானே நீக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் லார்ட்ஸ்மைதானத்தில் அரைசதம் அடித்ததால் தப்பித்தார். இந்த டெஸ்ட் தொடரை சரியான வாய்ப்பாகப் பயன்படுத்தி ரஹானே ரன் சேர்க்க வேண்டும்.என்னைப் பொறுத்தவரை அணியில் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வால் ராகுலுடன் சேர்ந்து களமிறங்க வேண்டும். 4-வது வீரராக ஷுப்மான் கில் களமிறங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பெண்கள் தரவரிசை: 3-ம் இடத்தில் மிதாலி

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில், பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750 புள்ளி) 2-வது இடமும் வகிக்கின்றனர்.

ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்தில் உள்ளார் (10 ஆயிரத்துக்கும் மேல்) என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு

ஆஸ்திரேலியால் பிரபலமான மகளிர் பிக்பாஷ் லீக் போட்டியில், இந்த ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக தேர்வாகியுள்ளார் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர். மகளிர் பிக்பாஷ் லீக் ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆகும். 8 அணிகள் மோதும் இந்த ஆண்டுக்கான மகளிர் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 8 இந்திய வீராங்கனைகள் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். 

இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் அணிக்காக விளையாடி வரும் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர், 2021 மகளிர் பிக்பாஷ் லீக் போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார். மகளிர் பிக்பாஷ் லீக்கில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகும் முதல் இந்தியர் என்கிற பெருமையை இவர் அடைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து