முக்கிய செய்திகள்

விலையை குறைக்க இதை செய்ய வேண்டும்: மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு

Tomatoes 2021 11 23

தமிழகத்தில் தக்காளியின் விலையை குறைக்க இதை செய்ய வேண்டும் என்று மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி இல்லாமலேயே இல்லத்தரசிகள் கடந்த சில நாட்களாக சமையல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு, தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில் வக்கீல் சிவா ஆஜராகி ஒரு முறையீடு செய்தார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆண்டு மே 5-ம் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் இந்த மார்க்கெட் அதே ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்டு என்ற மைதானம் உள்ளது. இங்கு தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படும்.

கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை. இந்த மைதானத்திற்குள் தக்காளியுடன் ஏற்றிவரப்பட்ட 11 லாரிகள் முன்பு நிறுத்தப்பட்டபோது அதிகாரிகள் மைதானத்தை நுழைவு வாயிலை பூட்டி விட்டனர். இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர், ஐகோர்ட்டு உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும். கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளது. எனவே தக்காளி மைதானத்தை திறக்க கோரிய எங்கள் வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து