முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு : 3 வாரம் ஒத்திவைத்தது ஐகோர்ட்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்துக்கு கவர்னரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ”கவர்னரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும், கவர்னர் ஒப்புதல் இல்லாமலும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் நளினி தரப்பில் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது” என்றார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கூடுதல் பதில்மனுவை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்ததனர். இதேபோல, முன் கூட்டி விடுதலை கோரி இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து