முக்கிய செய்திகள்

பார்லி. மக்களவையில் விவாதம் இன்றி வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா 4 நிமிடங்களில் நிறைவேற்றம்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Parliament 2021 11 29

Source: provided

புதுடெல்லி : 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் விவாதமின்றி 4 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. கடந்த 19-ம் தேதி குருநானக் ஜெயந்தியன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றாலும், பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.இந்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி வலியுறுத்தினார். எனினும் உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, நேற்று பிற்பகல் 12.06 மணிக்கு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு 12.10 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சில நொடிகளில் சபை ஒத்திவைக்கப்பட்டது. 2020-ல் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது, அரசு அதிக விவாதம் இல்லாமல் அதை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டின. இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கூறியதாவது:

‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம். விவாதம் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அக்டோபர் 3 அன்று உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது நடந்த வன்முறையை விரிவாக விவாதிக்க வேண்டும். மத்திய அமைச்சரின் மகன் ஓட்டிச் சென்ற எஸ்யூவி கார் மோதிய சம்பவத்தை எளிதாக கடந்து போக மத்திய அரசு முயலுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி கூறியதாவது., விவசாய மசோதாக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் கூட அதற்கு ஆதரவளித்தன. நாங்கள் மசோதாவைக் கொண்டு வந்தபோது அவர்கள் சபையை சீர்குலைக்கத் தொடங்கினர். அவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தனர். இது வேண்டுமென்றே செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து