முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் நீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்ளில் தொடர்ந்து பருவமழை அதிகளவில் பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள், வாழைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் விட்டு விட்டு நேற்று காலை வரை மழை பெய்தது.

அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 91 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 84 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நெல்லை, பாளை, சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம் உள்பட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழையும், கனமழையும் மாறி மாறி பெய்தது. நேற்று பகலிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக, இதுவரை நிரம்பாத மணிமுத்தாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. விநாடிக்கு 3,683 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. காட்டாற்று வெள்ளம் மட்டுமே மணிமுத்தாறு ஆற்றில் செல்கிறது. இதனால் 107.55 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து நேற்று காலை 110.90 அடியானது.

மணிமுத்தாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 118 அடியாகும். தற்போது அணை திறக்கப்படாததால் நேற்று மாலையே அது 112 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. எனவே விரைவில் மணிமுத்தாறு அணையும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பும் நிலையை அடைந்ததால், அணை பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று காலை பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை பாதுகாப்பு கருதி ஆற்றில் 8,449 கனஅடி தண்ணீரும், அனைத்து கால்வாயில் முழுஅளவிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர்மட்டம் சற்று குறைந்து நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 138 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.87 அடியாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் நெல்லை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை சுமார் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. மேலும் தாமிரபரணியின் கிளைநதிகளான கடனாநதி, சிற்றாறு ஆகியவற்றின் வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.

இதனால் மருதூர் அணைக்கட்டை கடந்து நேற்று சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் ஸ்ரீவைகுண்டம், முக்காணி தடுப்பணைகளை கடந்து வீணாக கடலில் சென்று கலக்கிறது. பெரும்பாலான தாமிரபரணி கால்வாய்களிலும் தண்ணீர் வெள்ளமாக செல்வதால் பல ஏக்கர் விளைநிலங்களும், தண்ணீரில் மூழ்கி உள்ளன. சில இடங்களில் தரைப்பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து