முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்ந்தது

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது. ஒரே ஆண்டில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.770 உயர்ந்துள்ளது பயன்படுத்துவோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள், சமையல் கியாஸ் விலையை மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக சமையல் கியாஸ் மற்றும் வணிக ரீதியான கியாஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இவற்றின் விலை ரூ.2 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.770 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வணிக ரீதியான தொழில் சார்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்தவர்கள் வணிக பயன்பாடு சிலிண்டரை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஓட்டலில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இட்லி, தோசை, டீ, காபி போன்ற ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய உணவு பண்டங்கள் விலை உயர வாய்ப்புள்ளது. வணிக பயன்பாட்டுக்கான விலை உயர்ந்த போதும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விலை இதுவரை உயர்த்தப்படவில்லை. கடந்த மாதம் நிர்ணயிக்கப்பட்ட விலையே தற்போதும் நீடிக்கிறது.

தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.915.50-க்கு விற்கப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் விலையின் உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ரவி தெரிவித்துள்ளார். காய்கறி விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கியாஸ் விலையும் அதிகரித்து இருப்பதால் ஓட்டல் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து