முக்கிய செய்திகள்

அத்துமீறும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நன்மதிப்பு பாதிக்கும்: சென்னை ஐகோர்ட் கருத்து

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      தமிழகம்
Chennai-High-Court 2021 3

காவல் துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மீதான நன்மதிப்பிற்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூர்நிஷா என்பவர் தாக்கல் செய்த மனுவில், பொதக்குடியில் தனக்கு சொந்தமான நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசுப் நாசியா ஆகியோரிடம் விற்க முன்தொகை வாங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர், நிலத்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி பணத்தை திருப்பிக் கேட்ட உடனே திருப்பிக் கொடுக்க முடியாததால், தன் மீதும், தனது மகன் மீதும் கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

புகாரை பெற்ற உதவி ஆய்வாளர் தங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், 3 வாரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டாதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய முயற்சித்த நிலையில், நிலத்திற்கு பணம்கொடுத்த மூவரும், உதவி ஆய்வாளர் மற்றும் சிலருடன் நவம்பர் 18-ம் தேதி தனது வீட்டுக்குள் நுழைந்து, கணவரையும், தன்னையும் அடித்து, வீட்டை விட்டு விரட்டி சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டதுடன், வீட்டிலிருந்த பணம் மற்றும் 27 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும், வீட்டை மீட்டு ஒப்படைக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவில், நவம்பர் 27-ம் தேதி தபால் மூலம் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் கூறியுள்ளதையும், உதவி ஆய்வாளருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டி இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,காவல் துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மீதான நன்மதிப்பிற்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அறிவுறுத்தியுள்ள நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து