முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020-ல் தமிழகத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

28 மாநிலங்களில் 2020-ம் ஆண்டு மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,862 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதே காலகட்டத்தில் தமிழகத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 9 கடற்கரையோர மாநிலங்கள், கடலோர யூனியன் பிரதேசங்கள், தீவுப் பகுதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்ட புயல் எச்சரிக்கை மையங்களைக் கொண்டுள்ளதாக புவி அறிவியல் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளில் சென்னை, மும்பை, கொல்கத்தா உட்பட 7  புயல் எச்சரிக்கை மையங்களும், டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மையப்படுத்தப்பட்ட புயல் எச்சரிக்கைப் பிரிவும் உள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில்  கூறியுள்ளார்.    

நாடு முழுவதும் மின்னல் தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை  கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் போக்கினை சமீபத்திய ஆய்வுகள் காட்டுவதாக மற்றொரு கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 28 மாநிலங்களில் 2018-ம் ஆண்டு மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,357 ஆகவும், 2020-ல் 2,862 ஆகவும் இருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பீகாரில் 2018ம் ஆண்டு 177-ஆக இருந்த உயிரிழப்பு 2020-ல் 430 ஆக அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் இதேகாலத்தில் 82-லிருந்து 64 ஆகக் குறைந்துள்ளது என்று அமைச்சரின் பதிலுக்கான இணைப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்  இந்தக் காலக்கட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து