முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் 76 ஆண்டுகளுக்கு பின் 2-ம் உலகப்போர் குண்டு வெடிப்பு

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஜெர்மனியில் ரெயில்வே கட்டுமான தளத்தில், 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இரண்டாம் உலகப்போர் 1939-ம் ஆண்டு, செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கியது. 1945-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதில் உலகின் பெரும்பாலான நாடுகள் பங்கேற்று சண்டை போட்டன. 1939-ம் ஆண்டு, நாஜி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன்தான் இந்த இரண்டாவது உலகப்போர் தொடங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வெடிக்காத போர்க்கால குண்டுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகளால் போடப்பட்ட குண்டுகள், போர் முடிந்து 76 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஜெர்மனியில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன. அதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, பெரும்பாலான குண்டுகள் வெடிக்காமல் நிபுணர்களால் செயலிழக்க செய்யப்படுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு, பிராங்பர்ட் நகரில் 1.4 டன் எடையுடைய பிளாக் பஸ்டர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, 70 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், அங்கு முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர் பாலத்துக்கு அருகே ரயில்வே துறை கட்டுமான தளத்தில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அங்கு அந்த பாலத்துக்கு கீழே, பிரதான ரயில் நிலையத்துக்கு அருகே துளையிடுகிற பணி நடந்தது. அப்போது அங்கே கிடந்த இரண்டாம் உலகப்போர் குண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. 

பாலத்துக்கு அருகே சுரங்கப்பாதை பணியின்போது இந்த குண்டு வெடித்ததாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இந்த குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது. ஒரு எந்திரம் குண்டு வெடிப்பின் போது கவிழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு ஆம்புலன்சுகள் விரைந்தன. மீட்பு படையினரும் வந்தனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் விரைந்து வந்து வெடிகுண்டின் எச்சங்களை ஆராய்ந்தனர். படுகாயம் அடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெரும்பாதிப்புக்கு ஆளானது. டச் பான் ரயில் நிறுவனம் ரயில் போக்குவரத்தை நிறுத்தியது. தற்போது நீண்ட தூர ரெயில் தடங்களில் ரயில்கள் இயக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வெடித்த இரண்டாம் உலகப்போர் குண்டு எடை 250 கிலோ இருக்கும் என்று பேவேரியா மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ஜோக்சிம் ஹெர்மான் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து