முக்கிய செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மதுரை, நெல்லை புதிய பஸ் நிலையங்கள் இன்று திறப்பு : முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      தமிழகம்
nellai-busstand 2021 12 07

Source: provided

மதுரை : மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதே போல் நெல்லை பேருந்து நிலையத்தையும் அவர் திறந்து வைக்கிறார். 

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 175 கோடியில்  கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதியினை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.  

மதுரை மாநகரின் மைய பகுதியில் 1921-ம் ஆண்டு அமைக்கப்பட்டது மத்திய பேருந்து நிலையம். மீனாட்சி பேருந்து நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இது 1971 முதல் பெரியார் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. பின்னர், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையத்தில் தனித்தனியாக புறநகர் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டது.  

175 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. 57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும், 450 கடைகள்  இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளன.  பேருந்து நிலையத்தின் தரை தளத்தின் கீழே 2 அடுக்குகளில் 5000 இரு சக்கர வாகனங்களும், 350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் காத்திருப்பு பகுதி, லிப்ட், நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதை ஆகியவையும் கட்டமைக்கப்பட்டுள்ளன. 

பெரியார் பேருந்து நிலைய கட்டிடங்களில் பிரம்மாண்ட தமிழி எழுத்துக்களும், மாமதுரை போற்றுவோம் என்ற தலைப்பில் கண்கவர் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக நாட்டார் தெய்வங்களின் படங்கள், நாட்டுப்புற கலைகளின் படங்கள் வண்ண ஓவியங்களாக படைக்கப்பட்டுள்ளன. 

இது தவிர, சுமார் 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெரியார் பேருந்து நிலைய படமும், மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளின் படங்களும், அதில் பயணம் செய்த மக்களின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மதுரையின் சுற்றுலா தளங்களான திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களும், பண்பாட்டு அடையாளங்களான சித்திரை திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதியினை மட்டும் இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  அத்துடன், பெரியார் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தையும், ஜான்சி ராணி பூங்காவில் தொல்பொருள் அங்காடிகள் அமைக்கும் கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைக்கிறார்.

இதே போல்  நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உட்பட 110 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். 

நெல்லை மாநகரை அழகு படுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில் புதிய பேருந்து நிலைய விரிவாக்கம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சந்திப்பு ரெயில் நிலையம் அருகே மூன்று அடுக்குகளைக் கொண்ட இரண்டு சக்கர வாகன நிறுத்தம், புதிய பேருந்து நிலையத்தில் அறிவியல் பூங்கா, உள்பட ரூ. 110.19 கோடியில்  முடிவடைந்த 12 பணிகளை இன்று சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார்.

புதிய பேருந்து நிலையத்தில் மாணவ- மாணவிகளை கவரும் வகையிலும், அறிவில் திறனை வளர்த்துக் கொள்ளும் அளவில் அறிவியல் தொடர்பான கருவிகள், படங்கள், ராக்கெட் வடிவடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் அறிவியல் பூங்கா அமைந்துள்ளது. இதுபோன்று நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் பேருந்து நிலைய விரிவாக்கப்பகுதிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கமிஷனர் விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து