முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சனிக்கிழமை, 11 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி ஆருத்ரா விழாவின் தொடக்கமாக நேற்று கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நேற்று (டிச.11) நடந்தது. உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் வேதமந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்கிட கோவில் கொடிமரத்தில் காலை 7.30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.  பின்னர் எம்பெருமான் நடராஜரின் வீதியுலா கோயில் பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

10 நாட்கள் நடைபெறும் ஆருத்ரா விழாவில், இன்று 12-ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும், நாளை 13-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 14-ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் எம்பெருமான் நடராஜர் வீதி உலா நடைபெறவுள்ளது. இதேபோல் 15-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 16-ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 17-ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 18-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுக் குதிரையிலும் வீதி உலா நடைபெறவுள்ளது.

19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன் பகுதியில் ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மன் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது.  20-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறவுள்ளது.  21-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து