முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவிலுக்குண்டான வாடகை தராவிட்டால் அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறப்பீர்கள்: மானாமதுரையில் மதுரை ஆதீனம் பேச்சு

சனிக்கிழமை, 11 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

சிவன் சொத்து குலநாசம் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் என்றும், கோவிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள், வாடகை கொடுக்காதவர்கள் உடனடியாக கொடுத்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ பிறக்க நேரிடும் என்றும் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு மதுரை ஆதீனம் பேசியதாவது:-

தமிழகத்தில் நமது முன்னோர்கள் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று தங்களது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருந்தனர். அதே போல் தற்போது நாமும் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் . ஆனால் தற்போது பலர் தினந்தோறும் அலைபேசிக்கு தான் சார்ஜ் ஏற்றுகின்றனர். உடலுக்கு சார்ஜ் ஏற்ற கோயில்களுக்கு செல்வதில்லை . தற்போது டி.வி., அலைபேசி மற்றும் மின்சார பொருள்களுக்கு கியாரண்டி உண்டு . அதேபோல் ஒரு வேட்டி சேலை வாங்கினால் கூடுதலாக இலவசமாக நான்கு வேட்டி சேலைகள் கூட கொடுக்கின்றனர் .

ஆனால் இந்த மனித உடலுக்கு நிரந்தரம் என்று எதுவும் உள்ளதா. ஆகவே மனிதர்கள் இருக்கின்ற காலத்தில் நல்ல செயல்களை செய்ய வேண்டும். மனிதர்கள் தற்போது தங்களது உடலை அழகுபடுத்த அழகு நிலையங்களில் அதிக நேரம் ஒதுக்குகின்றனர். ஆனால் இறை வழிபாட்டுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது .

தமிழகத்தில் பண்பாடு , கலாச்சாரம் போன்றவை கிராமங்களில்தான் உள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை கொடுக்காதவர்கள் அல்லது கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள் உடனடியாக கொடுத்து விடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ , மூஞ்சூறுவாகவோ பிறக்க நேரிடும். அதைப்போல சிவன் சொத்து குலநாசம் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து