முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது

திங்கட்கிழமை, 13 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மோட்ச ஏகாதசியாகவும் வைகுண்ட ஏகாதசியாகவும் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஆலயமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். பூலோக வைகுண்டம் என்று போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத ஆலயத்தில் பிரசித்தி பெற்ற  வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து தினம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நம்பெருமாள் நாச்சியர் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணி 45 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது. 

கொரோனா பரவல் காரணமாக இந்நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவில் உட்புறத்தில் 117 சி.சி.டி.வி. கேமராக்களும், வெளிப்புறத்தில் 90 சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பின்பே பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதே போல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில் கோவிந்தராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மூன்று மலைகளில் ஒன்றான விஷ்ணு மலையில் எழுந்தருளிய ஸ்ரீ லட்சுமி வெங்கடரமணா திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெறுகிறது. சுவாமி சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.  சேலம் கோட்டை பகுதியில் உள்ள அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலிலும்,  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சோலா கடைவீதி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உத்திர வீரராகவர் பெருமாள் கோவிலிலும்  சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெறுகிறது. 

சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு விழாவில்  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜனக நாராயண பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். வைகுண்ட ஏகாதாசி முன்னிட்டு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வெள்ளி கவசம் சார்த்தப்பட்டு தீபாரதனை.கெஜலட்சுமி மற்றும் வைகுந்த வாயிலுக்கு தீபாரதனைக்கு பின் வைகுந்தவாசல் திறக்கப்படுகிறது.   இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெறுகிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டை உண்ணாமல் விரதம் இருக்கும் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து இன்று விரதம் முடித்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து