முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அஷ்டமி சப்பர வீதி உலா: மீனாட்சி அம்மன் எழுந்தருளிய தேரை பெண்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்துக்கு இணையாக நேற்று நடந்த அஷ்டமி சப்பர வீதிஉலாவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். மீனாட்சி அம்மன் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் நடக்கும் அஷ்டமி சப்பர வீதிஉலாவில் சுவாமி- அம்பாள் மதுரை நகரின் வெளி வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பார்கள். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

இந்த ஆண்டுக்கான அஷ்டமி சப்பர வீதி உலா நேற்று (27-ம் தேதி) நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 6.15 மணிக்கு கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் மற்றும் மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியபடி புறப்பட்டனர்.

பின்னர் கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 சப்பரங்களில் (தேர்) சுவாமி- அம்பாள் தனித்தனியாக எழுந்தருளினார். அதனை தொடர்ந்து ஹர ஹர சங்கர... சிவ சிவ சங்கர... என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பர தேரோட்டத்தை தொடங்கினர். இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

யானைக்கல், விளக்குத் தூண் சந்திப்பு, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, தவிட்டு சந்தை, தெற்குவாசல், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், மேலவெளி வீதி, குட்ஷெட் ரோடு, வக்கீல் புதுத்தெரு வழியாக அஷ்டமி சப்பர தேரோட்டம் நடந்தது.

வழி நெடுகிலும் பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக வந்து பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழா தேரோட்டத்துக்கு இணையாக நேற்று நடந்த அஷ்டமி சப்பர வீதிஉலாவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 11 மணியளவில் தேர் நிலையை அடைந்தது. இதையொட்டி வெளி வீதி மற்றும் தேரோட்டம் நடந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து