முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூரில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு

வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தைச் சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினர் மீட்டனர்.

தஞ்சாவூர் அருளானந்த நகர் ஏழாவது குறுக்குத் தெருவிலுள்ள ஒரு வீட்டில் தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இப்பிரிவைச் சேர்ந்த காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர்கள் இரா. ராஜாராம், ப.அசோக் நடராஜன் தலைமையில் காவல் துணைக்கண்காணிப்பாளர் சந்திரசேகரன், காவல் ஆய்வாளர் முருகேசன், உதவிஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், பாலசந்தர் உள்ளிட்டோர் கொண்ட காவலர்கள் தஞ்சாவூர் அருளானந்த நகர் பகுதியிலுள்ள தொடர்புடைய வீட்டில் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்த சாமியப்பனின் மகன் என்.எஸ். அருண பாஸ்கரிடம் நடத்திய விசாரணையில், தனது தந்தையிடம் தொன்மையான கோயிலைச் சார்ந்த பச்சை மரகத லிங்கம் இருப்பதாகவும், அதை தற்போது வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துள்ளதாகவும் கூறினார். அந்தச் சிலை அவர் தந்தையிடம் எப்படி, யார் மூலம்,எப்போது வந்தது என்பது குறித்து கேட்டபோது, அது தொடர்பாக எவ்வித ஆவணங்களும் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்தார். 

எனவே அந்தத் தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்துமாறு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் கேட்டதன் பேரில், வங்கி பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து அருண பாஸ்கர் எடுத்து வந்து கொடுத்தார். அவ்வாறு ஆஜர்படுத்தப்பட்ட மரகதலிங்கம் ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக ஆய்வாளர் முருகேசன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்தச் சிலை ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமானதா என்பது குறித்தும், இதன் தொன்மைத் தன்மைக் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து