முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுசீந்திரம், நாமக்கல் கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா : பக்தர்கள் திரண்டு தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : குமரி மாவட்டம் சுசீந்திரம் மற்றும் நாமக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனுமன் கோயில்களில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் ஆலயமான சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் 18 அடி உயர விஸ்வரூப தரிசன ஆஞ்சநேயர் உள்ளார். இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் பல்வேறு பூஜைகள் நடந்தன. 

ஆஞ்சநேயர் ஜெயந்தியான நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதி எதிரே உள்ள ராமபிரான், சீதாதேவிக்கு சிறப்பு சோடஷ அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 8 மணி முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகங்கள் தொடங்கின. நல்லெண்ணெய், பால், தயிர், சந்தனம், குங்குமம், களபம், மஞ்சள், விபூதி, அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மாதுளைச்சாறு, பஞ்சாமிர்தம், தேன் ஆகிய 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணி வரை அபிஷேகம் நடைபெற்றது. இதனை காண  உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் திரண்டு தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசலை சமாளிக்கும் வகையில் கோயிலில் 4 வாசல்களும் திறக்கப்பட்டு இருந்தன. பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 50 ஆயிரம் லட்டுகள் வரை தயாரிக்கப்பட்டு இருந்தன. வடையும் வழங்கினர். அபிஷேகத்துக்காக ஆயிரக்கணக்கான லிட்டரில் பால், தயிர் கொண்டு வரப்பட்டு இருந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நேற்று மாலை ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. 

நாமக்கல்:

நாமக்கல்லில் உள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலைகள் சார்த்தப்பட்டன. சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து, அருள்மிகு ஆஞ்சநேயருக்கு நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில், எண்ணெய், சீகைக்காய், 5008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.  வெற்றிலை மாலை அணிவித்து சொர்ண அபிசேகம் நடந்தது. பின்னர், துளசி, ரோஜா, மல்லிகை, தாமரை உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க மலர்கள் கொண்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. 

அதை தொடர்ந்து 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு பகல் 1 மணிக்கு, உடல் முழுவதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  மேலும் ஒரு லட்சத்து எட்டு வடைகள் ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்டிருந்தது. ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்ட வடைகள் மற்றும் பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து