முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இதுவரை 8.85 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 84 லட்சத்து 83 ஆயிரத்து 914 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை 5 கோடியே 13 லட்சத்து 1,958 பேருக்கு போடப்பட்டுள்ளது. 2-வது தவணை 3 கோடியே 71 லட்சத்து 81 ஆயிரத்து 956 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய பொதுமக்கள் பின்னர் ஆர்வத்துடன் போட முன்வந்தனர். கொரோனா 2-வது அலையின் பாதிப்பு தடுப்பூசி போடும் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள பேராயுதமாக விழிப்புணர்வு செய்யப்பட்டதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து போட்டுக் கொண்டனர்.

மெகா சிறப்பு முகாம்கள் வாரம்தோறும் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டது. தற்போது 15-18 வயதுக்குட்பட்ட 25 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழகம் முதல் தவணை இலக்கை எட்டுகிறது. தமிழகத்தில் கடந்த 15-ம் தேதி வரை 8 கோடியே 84 லட்சத்து 83 ஆயிரத்து 914 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை 5 கோடியே 13 லட்சத்து 1,958 பேருக்கு போடப்பட்டுள்ளது. 2-வது தவணை 3 கோடியே 71 லட்சத்து 81 ஆயிரத்து 956 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது., தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. முதல் தவணை 88.62 சதவீதமும், 2-வது தவணை 64.23 சதவீதமும் போடப்பட்டுள்ளது. சென்னையில் முதல் தவணை 51 லட்சத்து 89 ஆயிரத்து 632 பேருக்கு (93.83 சதவீதம்) போடப்பட்டுள்ளது. 2-வது தவணை 40 லட்சத்து 70 ஆயிரத்து 956 (73.60 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் முதல் தவணை 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. கோவை விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி, கரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 90-100 சதவீதத்துக்குள் போடப்பட்டுள்ளது. இன்னும் 93 லட்சத்து 48 ஆயிரத்து 380 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதில் கோவிஷீல்டு, 78 லட்சத்து 36 ஆயிரத்து 655 பேருக்கும், கோவேக்சின் 15 லட்சத்து 11 ஆயிரத்து 725 பேருக்கும் செலுத்தப்பட வேண்டும்.

2-வது தவணை தடுப்பூசியை பொறுத்தமட்டில் நீலகிரி, கோவை மாவட்டங்கள் 80 சதவீதத்தை கடந்துள்ளது. கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சென்னை, அரியலூர், ராமநாதபுரம், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் 70-80 சதவீதம் பதிவாகி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்றும் தற்போது தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே உயிரிழப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். தற்போது உருமாறி வரும் கொரோனா வைரஸ் தாக்த்தை எதிர்கொள்ள தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து