முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: கலைஞர்கள் இசை அஞ்சலி

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 175-வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில், இசை கலைஞர்கள் பங்கேற்று, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா ஐந்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு, விழாவிற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில், திட்டமிடப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 6:30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, முக்கிய வீதி வழியாக தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர். தொடர்ந்து விழாவினை, சபா தலைவர் ஜி.கே.வாசன் துவக்கி வைத்தார். பந்தலில் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு, மங்கள இசை துவங்கியது. தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் நடந்தன. சரியாக, 9  மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை, பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக என்ற பாடல் பாடப்பட்டது. ஶ்ரீ தியாகராஜர் சன்னிதி முன், ஒரே மேடையில் இசை கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்தன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.

 

இதில், மஹதி, விசாகாஹரி, கடலுார் ஜனனி, சுசிந்தரா, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாதஸ்வர கச்சேரி, பின், உபன்யாசம் நடந்தது. இரவு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் மற்றும் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து