முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால், உள்நாட்டு விமானங்களில் ஒரே ஒரு கைப்பை மட்டுமே எடுத்து செல்ல அனுமதி

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

உள்நாட்டு விமானப் பயணிகள் தங்களுடன் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் பாதுகாப்பு பொறுப்பை கவனிக்கும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் ஐ.ஜி. விஜய் பிரகாஷ், சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவின் முந்தைய சுற்றறிக்கைப்படி உள்நாட்டு விமானங்களில் பயணியர் ஒரு ஹேண்ட் பேக் மட்டும் எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணியரின் உடைமைகளை பரிசோதனை செய்வதில் காலதாமதம், நெரிசல் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் உள்ளன. கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால், உள்நாட்டு விமான பயணியர் தங்கள் கைகளில் ஒரு ஹேண்ட் பேக் மட்டுமே எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள முக்கிய விமானங்களில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்நாட்டு விமான  பயணங்களின்போது பயணிகள், விமானத்துக்குள் ஒரு பையை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், இதை யாரும் பின்பற்றவில்லை. விமானத்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியும் குறைந்தது 3 பைகளை கொண்டு வருகிறார்கள். பரிசோதனை மையங்களில் அவற்றை சோதனை செய்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு சோதனை மையங்களில் கூட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மற்ற பயணிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. 

இவற்றை தவிர்க்க உள்நாட்டு விமானங்களில் பயணிகள் ஒரே ஒரு கைப்பையை மட்டுமே எடுத்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதே சமயம் மடிக்கணினி பை, பெண்கள் கைப்பை ஆகியவற்றை கூடுதலாக எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. இது குறித்து அனைத்து விமான நிறுவனங்களும் பயணியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை டிக்கெட்டிலும் அச்சிட்டு வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து