முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 3-வது வாரமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்: தேவையின்றி வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் தொடர்ந்து 3-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. தேவையின்றி வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், சரக்கு வாகன போக்குவரத்து, பெட்ரோல் பங்க், மருந்தகங்கள், மருத்துவ பணிகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் இயங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.கடந்த 9-ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் காணும் பொங்கல் பண்டிகையான 16-ம் தேதியும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று 3-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 16-ம் தேதி முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.

வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் வழக்கமான ஆட்டோக்கள் செயலி மூலம் இயக்கப்படும் வாடகைகார்கள் ஆகியவை பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கமி‌ஷனர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் முழு ஊரடங்கையொட்டி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இன்று அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கில் தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் சோதனை செய்யப்படுகின்றன.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் போலீஸ் கமி‌ஷனர் ரவி, ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி உள்ளனர். கடந்த முழு ஊரடங்கின் போது சென்னையில் 312 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. அது போன்ற சோதனை இன்றுயும் தொடர்கிறது. சென்னை புறநகர் பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 350 இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறது. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இன்று அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து