முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குக சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு, நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது குறித்து திட்டம் வகுக்கவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் கே.பாரதி தாக்கல் செய்த மனுவில், 'மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 391 ரூபாய் மட்டும் ஊதியமாக வழங்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் நிலையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துய்மைப் பணியாளர்களுக்கு 17 ஆயிரத்து 23 ரூபாய் வழங்கப்படுகிறது. சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில், இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கும் உரிய ஊதியம் வழங்க வேண்டும்' என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஒப்பந்த அடிப்படை, தேசிய திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் பணியாளர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது. மேலும், ஒரு நாட்டின் சிறப்பு, அங்குள்ள நலிந்த பிரிவினர் எப்படி நடத்தப்படுகின்றனரோ, அதன் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது என மகாத்மா காந்தி கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் அளிப்பது குறித்த திட்டத்தை, 12 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என்றும், அதுவரையில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து