முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ராகு - கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் இன்று இடப்பெயர்ச்சி ஆக உள்ளன. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு ராகு கேது தலங்களில் சிறப்பு யாகங்கள் லட்சார்ச்சனைகள் நடைபெற உள்ளன. 

ராகுவும், கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்கி சுப மற்றும் அசுப பலன்களைத் தருவார்கள். ஜனன ஜாதகத்தில் ராகு, கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு, கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும் பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர். இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த வீடு கிடையாது. இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ, யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். இப்போது மேஷ ராசிக்கு வரப் போகும் ராகு, செவ்வாயைப் போலவும், துலாம் ராசிக்கு வரப் போகும் கேது சுக்கிரனைப் போலவும் செயல்படப் போகிறார்கள்.

ராகுபகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது ராகு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது. 

திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் எனப் போற்றப்படும் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். 

இன்று ( 21-ம் தேதி) பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

இதையொட்டி நேற்று (20-ம் தேதி) இருகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாரதனையும் நடைபெறவுள்ளது. அன்று மாலை ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது 

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம். 

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று தேவார இன்னிசை, நாதஸ்வரம், பரதநாட்டியும், நாத சங்கமம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருப்பாம்புரம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இன்று 21-ம் தேதி ராகு - கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. தென் காளகஸ்தி என்றழைக்கப்படும் திருப்பாம்புரம் தேவாரப்பாடல் பெற்ற பெருமை வாய்ந்ததாகும். இங்கு ஸ்ரீ வண்டுசேர்குழலி சமேத ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் வீற்றருந்து அருள்பாலிக்கிறார். ராகுவும் - கேதுவும் ஏக சரீரமாக இருந்து இறைவனைப் பூஜித்து அருள் பெற்றமையால் இது ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து