முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழாவின் 2-ம் நாள்: மதுரை மாசி வீதிகளில் பூத, அன்ன வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த சொக்கநாதர், மீனாட்சி

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Meenakshi 2022 04 02

Source: provided

மதுரை : சித்திரை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று மதுரை மாசி வீதிகளில் பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் ஆகியோர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் சித்திரைத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரரும், சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் காலை 10.30 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று மாலை வெள்ளி சிம்ம வாகனம், கற்பக விருட்ச வாகனம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

பெரிய உருவமும், அச்சுறுத்தும் கண்ணும், பற்களுமாக பார்ப்பவரை பயமுறுத்துவது பூதம். பிறவி பிணியும், பூதம் போல உயிர்களை பயமுறுத்தி கொண்டிருக்கிறது. இறைவனை சரணடைந்தால் அந்த பூதத்தை அடக்கி நம்மை கரை சேர்ப்பார். பூத வாகனத்தில் சிவனை தரிசித்தால் காரணம் இல்லாத பயம் நீங்கி மனதில் துணிவு உண்டாகும். வெண்ணிற அன்னம் தூய்மையின் அடையாளம். பாலும்,தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது. பாலும், நீருமாக உலகத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கிறது. அன்னம் போல மனிதனும், நல்லதை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த மீனாட்சி அன்ன வாகனத்தில் பவனி வருகிறாள்.  12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் உலா வருகின்றனர். 

8-ம் நாள் திருவிழாவான வரும் 12-ம்தேதி இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. 13-ம் தேதி திக் விஜயமும், முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வரும் 14-ம் தேதியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 15-ம் தேதி காலை 6.30 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டமும் அதைத் தொடர்ந்து 16-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து