முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலைக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 6,000 சிறப்பு பஸ்கள் இயக்கம்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai 2022 04 11

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ம் தேதி அதிகாலை 1.16 மணி வரையாகும். இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் சித்ரா பவுர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கவும், கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், 24 மணி நேரம் மின்சார வசதி, அவசர மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏதுவாக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 70 நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. அன்னதானம் செய்ய விரும்புவோர் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

இதுதவிர பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வருவதற்கு வசதியாக சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரெயில் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!