முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு: மதுரையில் கோலாகலமாக நடந்த மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று தேரோட்டம் நடக்கிறது

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
meenakshi-sundareshwarar-20

Source: provided

மதுரை : மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதையடுத்து தினசரி காலை மற்றும் மாலையில் அம்மனும், சுவாமியும்  வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும்  வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமையும், திக்கு விஜயம் புதன்கிழமையும் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் உள்ள வடக்கு ஆடி வீதி, மேல ஆடி வீதி சந்திப்பில் நேற்று காலை 10.35 முதல் 10.59 மணிக்குள் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அப்போது அம்மன் சிவப்பு நிறத்தில் பட்டாடை உடுத்தி இருந்தார்.

ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரூ. 25 லட்சம் செலவில் 10 டன் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருமண மேடையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் தயாராக இருந்தனர். 

இதனைத் தொடர்ந்து சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் ஆடி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார். இதையடுத்து 10:35 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் மிதுன லக்கினத்தில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

விநாயகர் வழிபாடு செய்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன‌.  இதைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டு  அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி சார்பிலும், மீனாட்சியம்மன் சார்பிலும் கோயில் பட்டர்கள் பிரதிநிதிகளாக இருந்து மாலை மாற்றும் வைபவமும், சுவாமிக்கும் அம்பாளுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து மங்கள  வாத்தியங்கள் முழங்க திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு மேளதாளத்துடன் பக்திகோசம் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் காலை 10.35 மணி மணி முதல் 10.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரரின் திருக்கல்யாண வைபவத்தை காண பல்வேறு இடங்களில் அகன்ற திரைகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் நேரடியாக பார்க்க முடியாத பக்தர்களின் கவலையை போக்கும் வகையில் யூ டுயூப் சேனலில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீனாட்சிக்கும், பிரியாவிடை அம்மனுக்கும் மாலை மாற்றி திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை யூ டியூப்பில் பார்த்து பெண்கள் பக்தி பரவசத்துடன் தாலி மாற்றிக் கொண்டனர். 

ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் முகூர்த்த நேரத்தில் பெண் பக்தர்கள் புது தாலி மாற்றி கொள்வார்கள். கோவிலில் மஞ்சள் சரடு கொடுப்பார்கள். இந்த ஆண்டு பெண் பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்து பெண் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரலையில் பார்த்து தாலி மாற்றிக்கொண்டனர்.

திருக்கல்யாண நிகழ்வையொட்டி பாதுகாப்பிற்காக 3,500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சர்பிலும் மதுரை மாநகராட்சி சார்பிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

திருக்கல்யாணத்தை தொடர்ந்து  சேதுபதி பள்ளியில் கல்யாண விருந்து நடைபெற்றது. சித்திரை , ஆடி வீதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் கல்யாண மொய் வசூல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி அம்மன் பெயரில் பொய் பணம் செலுத்தி பிரசாதம் பெற்றுச் சென்றனர். மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். காலை 6:30 மணி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!