முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      தமிழகம்
vaiko-2022-03-31

Source: provided

சென்னை : மருத்துவம் கற்பிப்பதற்கு பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடம் ஆக்க முயற்சிப்பதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எப்பாடுபட்டேனும்  தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜிப்மர் இயக்குனர் ஒரு சுற்று அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.

ஜிப்மர் அலுவலகக் கோப்புகள் அனைத்தையும், எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்து இருக்கின்றார். மருத்துவம் கற்பிப்பதற்குப் பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடம் ஆக்க முயற்சிக்கின்றார்.

எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும்.

அந்தச் சுற்று அறிக்கையை அவர் உடனே திரும்பப் பெற வேண்டும்; அந்த இயக்குனரை இந்தி பேசும் மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற மே 10 (நாளை) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், புதுவை ஜிப்மர் நுழைவாயில் முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே. மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து