முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு பிரதிநிதி தலைமையில் முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
Mullaiperiyaru-Dam 2022 05

Source: provided

தேனி : மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் நேற்று முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவை நடைமுறைப்படுத்தி நீர்மட்டம் உயர்வதை கண்காணிக்கவும், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்து தேவையான ஆலோசனைகள் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2014-ம் ஆண்டு மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு பிரதிநிதி தலைமையில், தமிழக மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து தலா ஒரு பிரதிநிதி என மொத்தம் 3 பேர் இந்த கண்காணிப்பு குழுவில் அங்கம் வகித்தனர். 

இந்நிலையில் இந்த குழுவில் தமிழக-கேரள அரசுகள் தரப்பில் கூடுதலாக தலா ஒரு பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து 5 பேரை கொண்ட இந்த கண்காணிப்பு குழுவினர் நேற்று முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். 

கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில், தமிழக பிரதிநிதிகளான நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளான நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், கூடுதல் தலைமை செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகியோர் தேக்கடியில் இருந்து படகுகள் மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு நேற்று பகலில் புறப்பட்டுச் சென்றனர்.

அணையின் மதகு, சுரங்கப் பகுதி, பேபி அணை, பிரதான அணை ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அணையின் சுரங்கப் பகுதியில் கசிவு நீர் அளவை பார்வையிட்டு அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து