முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்த ஆலோசனை: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்

திங்கட்கிழமை, 9 மே 2022      தமிழகம்
ponmudi-2022-05-09

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தி மாணவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ''தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தனியாக கவுன்சிலிங் நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங் நடத்தலாமா? என்று கேட்கிறார். அந்தந்த கல்லூரிகளிலேயே, அங்கிருக்கின்ற பகுதி மாணவர்களே விண்ணப்பித்து, அவர்களுக்கு நேரடியாக, வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

இந்த கவுன்சிலிங் என்பது அவ்வளவு சாதரணமானது கிடையாது. கவுன்சிலிங் என்றால் உடனே ஆன்லைனில் நடத்தலாம் என்பார்கள். ஆன்லைனில் நடத்துவதில் எவ்வளவு குளறுபடிகள் இருந்தது என்று சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் பார்த்திருக்கிறோம். எனவே அது குறித்தெல்லாம் அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்கின்ற மாணவர்களுக்குக் கூட, அந்த கவுன்சிலிங்கை பத்து இடங்களில் நடத்தி, அவர்களுக்கு நேர்முகமாக அவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்றெல்லாம் கூட ஆலோசனைகளையெல்லாம் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே கலைக்கல்லூரிகளில் காலியிடங்களுக்கு கவுன்சிலிங் நடத்துவது என்பது நிச்சயமாக நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.

எந்த கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கிறதோ, அங்கு கூடுதல் காலம் கொடுக்கிறோம். குறிப்பிட்ட காலத்துக்குள் சேரவில்லை என்றாலும் அதன்பின்னர் விண்ணப்பித்து சேரலாம். எனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறோம். எனவே அத்தகைய கவுன்சிலிங் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து