முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி தவறிழைக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்த அரசு கவனம் செலுத்தும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
Anbil-Mahes 2021 07 13

மாணவர்கள் அளவுக்கு மீறினால் வெளியேற்றப்படுவார்கள். ஏற்கெனவே சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி தவறிழைக்கும்  மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தும். நிலைமை கைமீறினால் மாற்றுச் சான்று அளிக்க  அரசு தயங்காது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ‘‘குழந்தைகள், வளரிளம் பெண்களுக்கான வளர்ந்து வரும் கல்வி’’ குறித்த கருத்தரங்கு நேற்று காலை நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: வளர் இளம் பருவத்துக்கு  மாணவர்கள் வரும் போது, அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது  தொடர்பாகவும், கற்றல் இடைவெளி, ஒழுக்கக் குறைபாடு ஆகியவற்றை எப்படி போக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த  வேண்டும். சமூக பொருளாதார பின்னடைவுகள் மாணவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தவறான தாக்கத்தை போக்க வேண்டும். கொரோனாவுக்கு பின் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படி கையாள்வது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்ளும் நிகழ்வுகளை தவிர்க்க  பல்வேறு நிகழ்ச்சிகள், ஆரோக்கியமான போட்டிகள், நன்னெறி வகுப்புகள் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி மாணவர்கள் ஆசிரியர்களிடம்  முறைகேடாக நடந்து கொள்ளும் போதுதான் மாற்றுச் சான்று தரப்படுகிறது. அப்படியான மாணவர்களுக்கு மாற்றுச் சான்றுகளை தரலாம் என்று அவர்களின் பெற்றோரே கூறுகின்றனர். 

ஏற்கெனவே பல மாவட்டங்களில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொண்ட போதும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிலைமை கைமீறிச் செல்லும் போதுதான் மாற்றுச் சான்று அளிக்கப்படும். இனி மாணவர்கள் எந்தவிதமான தவறான செயல்களிலும் ஈடுபடக் கூடாது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக  பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது  தொடர்பாக இதுவரை எந்த முடிவும் பள்ளிக் கல்வித்துறை எடுக்கவில்லை. அது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி, வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். 

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர் சேர்க்கை தொடங்கும். வரும் கல்வி ஆண்டில் தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து