முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 பேர் அடங்கிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: இலங்கை பிரதமரானார் ரணில் விக்ரமசிங்கே

வியாழக்கிழமை, 12 மே 2022      உலகம்
ranil-1-2022-05-12

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ரணிலுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கடும் வன்முறை... 

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில்  கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அடிபணிந்த  மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.  இதைத்தொடர்ந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இலங்கையில் கடும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக உச்ச கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில் இலங்கையில் தற்போது அடுத்தடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதிய பிரதமராக...

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கிடையே இலங்கையின் புதிய பிரதமராக நேற்று ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த அவர் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து  15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்கவுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் வரும் திங்கட்கிழமை கூட உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரவையில்... 

ராஜபக்சே  இருக்கும் ஆட்சியில் எந்த பதவியும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ், இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க ரணில் விக்கிரமசிங்கே முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

போராட்டக்காரர்கள்...

இதற்கிடையே முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளையில், ராஜபக்சேக்களை  காப்பாற்றும் நோக்கில் ரனில் பதவியேற்பு நடைபெற்றால், ரனிலை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை தொடரவேண்டும் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர். 

அதிபருக்கு எதிராக... 

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்தனர். இந்த கூட்டத்தில், அதிபருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட பதவி நீக்கம் செய்ய முடியாது என்பதால், அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றலாம் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி வரும் 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து