முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே அணியை விட்டு விலகுகிறாரா ஜடேஜா ?காசி விஸ்வநாதன் பதில்

வியாழக்கிழமை, 12 மே 2022      விளையாட்டு
12 Ram 54

Source: provided

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

மீண்டும் கேப்டனாக...

ஐபிஎல் 2022 போட்டி தொடங்குவதற்கு முன்பு சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து டோனி விலகினார். இதையடுத்து ஜடேஜா, சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்த நெருக்கடியில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக டோனி மீண்டும் தேர்வானார். அதற்குப் பிறகு சி.எஸ்.கே விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் சி.எஸ்.கே வெற்றி பெற்றுள்ளது.

ஜடேஜாவுக்கு காயம்...

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் தில்லிக்கு எதிராக சி.எஸ்.கேவின் சமீபத்திய ஆட்டத்தில் காயம் காரணமாக ஜடேஜா விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமாகாததால் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து ஜடேஜா விலகியுள்ளார். சி.எஸ்.கே அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே பிளேஆஃப்புக்கான போட்டியில் இருக்க முடியும் என்கிற நிலையில் ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயமும் அதனால் அவர் போட்டியிலிருந்து விலகியிருப்பதும் சி.எஸ்.கே அணிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. கரோனா தடுப்பு வளையத்திலிருந்து வெளியேறி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஜடேஜா. 

நிர்வாகம் மறுப்பு...

இந்நிலையில் சி.எஸ்.கே அணியைத் தொடர்ந்து வழிநடத்த தயாராக இருந்தும் தனக்கு ஆதரவாக இல்லாத காரணத்தால் சி.எஸ்.கே அணி நிர்வாகத்தின் மீது ஜடேஜா அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடுத்த வருடம் சி.எஸ்.கே அணியில் ஜடேஜா விளையாடுவது சந்தேகம் என்றும் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இத்தகவலை சி.எஸ்.கே அணியின் காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார். சி.எஸ்.கேவின் வருங்காலத் திட்டங்களில் ஜடேஜா நிச்சயம் உள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படியே அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று ஓர் ஆங்கில ஊடகத்துக்கு அவர் பேட்டியளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து