முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை வில்வித்தை:இந்திய அணிக்கு முதலிடம்

வியாழக்கிழமை, 12 மே 2022      விளையாட்டு
12 Ram 58-1

Source: provided

ஈராக்கின் சுலைமானியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஜூனியர் வில்வித்தை அணி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய ஜூனியர் வில்வித்தை அணி 8 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 14 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அதே போல, ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி, 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

___________

கே.எல். ராகுல் திருமணம் 

குறித்து வெளயான தகவல்

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், நடிகர் சுனில் செட்டியின் மகள் அத்தியா செட்டியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. அந்த செய்தி உண்மையில்லை என அத்தியா செட்டி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கே.எல்.ராகுல், அத்தியா செட்டி திருமணம் எப்போது என அத்தியாவின் தந்தை நடிகர் சுனில் செட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு கே.எல் ராகுல் என்றால் விருப்பம். என் மகள் எப்படி இருந்தாலும் ஒரு நேரத்தில் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்.  ஆனால் விரைவாக திருமணம் நடைபெற்றால் நல்லது. ஆனால் அது அவர்களுடைய விருப்பம். எனக்கு அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் கவலை இல்லை. என்னுடைய ஆசிர்வாதம் அவர்களுடன் எப்போதுமே இருக்கும். இவ்வாறு சுனில் செட்டி தெரிவித்துள்ளார்.

___________

டோனியின் சாதனையை 

முறியடிக்கிறார் சாம்சன்

நடந்து முடிந்த 12 போட்டிகளில் சஞ்சு சாம்சனின் டாஸ் முடிவுகள் தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, வெற்றி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி என்றே வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சஞ்சு சாம்சன் டாஸ் வென்றார். இருப்பினும் அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், டாஸ் தோல்வி அடைந்தாலும், எங்கள் அணி வெற்றி பெற்று வருகிறது எனவும் கூறினார்.

இவ்வாறாக தொடர் டாஸ் தோல்வி அடைந்து வரும் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனியின் டாஸ் தோல்வி சாதனையை முறியடிக்கவுள்ளார்.இதன்படி, கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எம்.எஸ். டோனி 12 டாஸ்களில் தோற்றுள்ளார்.  இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டாஸ் தோற்ற வீரர் என்ற மோசமான சாதனையை டோனி படைத்துள்ளார். இன்னும் ஒருமுறை சஞ்சு சாம்சன் டாஸ் தோற்றால், டோனியின் சாதனையை அவர் சமம் செய்வார். இரண்டு முறை தோற்றால், டோனியின் சாதனையை முறியடிப்பார்.

___________

'சைப்ரஸ்' தடகளத்தில் 

தங்கம் வென்றார் ஜோதி

சைப்ரஸ் நாட்டின் லிமாசோஸ் நகரில் சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 13.23 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் கடந்த 2002-ம் ஆண்டு அனுராதா பிஸ்வால் பந்தய தூரத்தை 13.38 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. சைப்ரஸ் நாட்டின் நடாலியா கிறிஸ்டோஃபி (13.34) வெள்ளிப் பதக்கமும், கிரீஸ் நாட்டின் அனீஸ் கராகியனி (13.47) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் லில்லி தாஸ் பந்தய தூரத்தை 4:17.79 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் அம்லன் போர் கோஹைன் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 22 வயதான ஜோதி யார்ராஜி ஆந்திராவைச் சேர்ந்தவர். இவரது தந்தை சூர்யநாராயணா தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

___________

ஒடிசாவில் அமைகிறது நாட்டின் 

மிக பெரிய ஹாக்கி ஸ்டேடியம் 

2018ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.  அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலையடுத்து உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 13ந்தேதி முதல் 29ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் 2023 உலக கோப்பையை நடத்த ஒடிசா அரசு முன்வந்துள்ளது.

இதுபற்றி ஒடிசாவின் விளையாட்டு செயலாளர் வினீல் கிருஷ்ணா கூறும்போது, ஒடிசாவில் ஹாக்கி போட்டி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான எண்ணற்ற பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார். இதற்காக புவனேஸ்வரில் கலிங்கா ஹாக்கி ஸ்டேடியத்தில் மேம்பாட்டு பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன.  இதேபோன்று, சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைய உள்ளது.  இது இந்தியாவின் மிக பெரிய ஹாக்கி ஸ்டேடியம் ஆக இருக்கும் என தெரிவித்தார்.

___________

புதிய அணியை விலைக்கு 

வாங்கிய 'நைட்ரைடர்ஸ்'

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக யுஏஇ டி20 லீக் போட்டி தொடங்கப்படவுள்ளது. இந்த வருடம் நடைபெறவுள்ள போட்டியில் ஆறு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. லீக் சுற்றில் 34 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஆறு அணிகளில் ஓர் அணியை நைட்ரைடர்ஸ் குழுமம் வாங்கியுள்ளது. அபுதாபி அணியை வழிநடத்தவுள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு அபுதாபி நைட்ரைடர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது நைட்ரைடர்ஸ் குழுமத்தின் 4-வது டி20 லீக் அணியாகும். 

பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கானும் ஜுஹி சாவ்லாவும் இணைந்து 2008-ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை விலைக்கு வாங்கினார்கள். சிபிஎல், யு.எஸ். டி20 போட்டி ஆகியவற்றிலும் நைட்ரைடர்ஸுக்கு சொந்தமாக ஓர் அணி உள்ளது.  யுஏஇ லீக் டி20 போட்டியின் 6-வது உரிமையாளர் இவர்கள். இந்தியாவின் அதானி, காப்ரி குளோபல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஓர் அணியைப் பெற்றுளன. 

 

____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து