முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரனில் கிடைத்த மண்ணிலிருந்து செடிகளை வளர்த்து நாசா சாதனை

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      உலகம்
NASA 2022 05 13

Source: provided

நியூயார்க் : சந்திரனில் கிடைத்த மண்ணில் இருந்து செடிகளை வளர்த்து வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞானிகள் சாதனை படைத்து உள்ளனர்.

சந்திரனின் மேற்பரப்பில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன.  இந்த நிலையில், அப்பல்லோ விண்கலம் பூமிக்கு அனுப்பிய சந்திரனில் இருந்து கிடைத்த மண் மாதிரிகளை கொண்டு செடிகளை வளர்ப்பது என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதன்படி, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் புளோரிடா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இதற்கான பணிகளில் இறங்கினர்.

ஒவ்வொரு செடிக்கும் ஒரு கிராம் அளவுள்ள சந்திரனின் மண்ணை ஆய்வு குழுவினர் ஒதுக்கியுள்ளனர்.  அதனுடன், நீர் மற்றும் செடிகளின் விதைகளை சேர்த்து உள்ளனர்.  அதன்பின்பு, தூய்மையான அறை ஒன்றில் அவற்றை சீலிடப்பட்ட கண்ணாடி பெட்டிகளில் வைத்து உள்ளனர்.  ஊட்டச்சத்து குறைவான மண் என்பதனால், தினசரி ஒரு திரவம் சேர்க்கப்பட்டு வந்துள்ளது.   2 நாள் கழித்து கவனித்த போது, விதைகள் முளைத்து இருந்தன.  இதனை கண்டு ஆய்வில் ஈடுபட்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியை அன்னா-லிசா பால் கூறும்போது, அதனை பார்த்து நாங்கள் வியப்பில் ஆழ்ந்து விட்டோம்.  முதல் 6 நாட்கள் வரை ஒவ்வொரு செடியும், அது சந்திர மண் மாதிரியில் இருந்த செடியாகட்டும் அல்லது வேறு செடியாகட்டும் ஒரேமாதிரியாக இருந்தது என்று தெரிவித்தார். 

6 நாட்களுக்கு பின்னர் விஞ்ஞானிகளுக்கு, பூமியில் விளைந்த செடிகளை போன்று இந்த செடிகள் வலுவாக இல்லை என தெளிவாக தெரிந்தது.

செடிகள் மிக மெதுவாக வளர்ந்தன.  வேர்களின் வளர்ச்சி தடைபட்டது.  சில செடிகளில் இலைகள் கூட வளர்ச்சி அடையவில்லை.  சிவப்பு வர்ணத்தில் புள்ளிகளும் தென்பட்டன என நாசா அமைப்பு தெரிவித்து உள்ளது.  எனினும், இந்த ஆராய்ச்சி நாசாவின் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து