முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மேடவாக்கத்தில் தாம்பரம், வேளச்சேரி இடையே புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
CM-4 2022 05 13

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி  பாலப் பகுதியை திறந்து வைத்தார். 

சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.146.41 கோடி மதிப்பீட்டில், மேடவாக்கத்தில் மறைமலையடிகள் பாலம் - இரும்புலியூர் சாலையில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட் - மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இரண்டு தனித்தனி மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 3 வழித்தட மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் வேளச்சேரி - தாம்பரம் தடத்தில், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைத்து 1.06 கி.மீ. நீளத்தில் மேம்பாலப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, தாம்பரம் - வேளச்சேரி தடத்தில், மவுண்ட் மேடவாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்புகளை இணைத்து 2.03 கி.மீ. நீளத்தில் இம்மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  

இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும், தாம்பரம், வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம்  பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கும் இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.  

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் குமார், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) பெருநகரம் கோதண்டராமன், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து