முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனி சர்க்கரை நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கே ரத்த பரிசோதனை : அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Ma Subramanian 2022 05 14

Source: provided

சென்னை : தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனி சர்க்கரை நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கே ரத்த பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோயாளிகளுக்கு வீடு வீடாக மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும். அதுவும் காலையில் எதுவும் சாப்பிடாமல் ரத்தம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு சாப்பிட்டு 2 மணி நேரத்தில் ரத்தம் கொடுக்க வேண்டும். இந்த அளவை கணக்கிட்டே மாத்திரைகளின் அளவை மருத்துவர் தீர்மானிப்பார்.

கிராமப்புறங்களில் உள்ள சாதாரண மக்கள் காலையிலேயே ரத்த பரிசோதனை செய்துகொள்ளும் வசதி செய்யப்படும் என்று சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். இந்த திட்டம் நேற்று தொடங்கியது. இனிமேல் தினமும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படும் 2,127 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 7 மணிக்கே ரத்த பரிசோதனை செய்யப்படும். திருத்துறைபூண்டி ஆதிச்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனை தொடங்கியதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோயால் மட்டும் பாதிக்கப்பட்ட 28.99 லட்சம் பேருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் 72.06 லட்சம் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது. எனவே நீரிழிவு கண்டு பிடிப்பு மற்றும் தொடர் சிகிச்சை முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இதனால் நெடுநேரம் சாப்பிடாமல் காத்திருந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். மக்களின் இந்த சிரமத்தை தவிர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் காலை 7 மணி முதல் ரத்த பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு இன்று முதல் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து