முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவில் 3 நாட்களில் 8.2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு : 42 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      உலகம்
KIM 2022 05 13

Source: provided

பியாங்யாங் : வடகொரியாவில் 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்களில் 42 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளால் 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.  வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்தது இல்லை.ஆனால் இப்போது அங்கும் இந்த தொற்று பரவ தொடங்கி உள்ளது.  இது குறித்து அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12ந்தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டார்.அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டது. 

அந்த நாட்டில் இதுவரை ஒருவர்கூட தடுப்பூசி போடவில்லை. கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசிதான் என்கிற நிலையில் அங்கு யாரும் தடுப்பூசி போட்டு கொள்ளாத சூழலிலும், போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையிலும் வடகொரியா என்ன செய்ய போகிறது என உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.எனினும், கொரோனா தொற்று பலி எண்ணிக்கை அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே 6 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மேலும் 21 பேர் பலியானார்கள்.

இதனால் பலி எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 27 ஆக அதிகரித்தது. ஆனால் ஒருவரது உயிரிழப்பு மட்டுமே அரசால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதற்கிடையே ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில், நாடு தனது அவசர கால இருப்புகளில் இருந்து விடுவித்துள்ள மருத்துவ பொருட்களை விரைவாக வினியோகிப்பதற்கான வழிமுறைகளை பற்றி அதிகாரிகள் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மற்ற நாடுகளில் கொரோனாவை எப்படி வெற்றிகரமாக கையாண்டார்கள் என்பதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, சீனாவில் இருந்து உதாரணம் எடுத்துக்கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.வட கொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அது பேரழிவுகளை ஏற்படுத்தி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.சீனாவும் தனது நட்பு நாடான வட கொரியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது.

ஆனாலும் இதற்கான வேண்டுகோள் வடகொரியா தரப்பில் இருந்து பெறப்படவில்லை என்று சீனாவும் கூறுகிறது.வட கொரியாவில் என்ன நடக்கப்போகிறது, கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த போகிறார்கள் என்று உலகமே ஆவலுடன் எதிர்நோக்குகிறது.  கடந்த ஏப்ரல் கடைசியில் இருந்து காய்ச்சல் வேகமாக பரவி வருகிற நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்ந்து 3 லட்சத்து 24 ஆயிரத்து 550 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என வடகொரியாவில் இருந்து வெளிவரும் அரசு ஊடக செய்தியான கே.சி.என்.ஏ. தெரிவிக்கின்றது.இதுதவிர, கூடுதலாக 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆக அதிகரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து மாகாணங்கள், அனைத்து நகரங்கள் மற்றும் கவுன்டி பகுதிகளிலும் முழு அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து பணி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இல்லாத வகையில் மூடப்பட்டு உள்ளன என்றும் கே.சி.என்.ஏ. தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து