முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வியாழக்கிழமை, 19 மே 2022      தமிழகம்
CM-2022-05-19

பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று கோவையில் நடந்த தொழில் கூட்டமைப்பினருடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரம் கோவை மாநகரம் தான்.  ஜவுளி, பொறியியல்,  ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மோட்டார் பம்புகள்,  வெட் கிரைண்டர், தங்க நகை மற்றும் ஆபரணக் கற்கள் உற்பத்தி என அனைத்துத் தொழில்களிலும் சிறந்த நகரம் இந்த கோவை நகரம் தான்.  கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என்ற பெயரை பெற்ற நகரம் இந்தக் கோவை.

கோயம்புத்தூரில் 700-க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையான வெட் கிரைண்டர்களை தயாரித்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறீர்கள். இவற்றுக்கு  கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் என புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதே இதன் பெருமைக்கு சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.

தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையிலும் இந்த மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, இந்த தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரமாகவும் இந்த கோவை மாநகரம் உருபெற்றுள்ளது. இந்நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம், உலக அளவில் அவுட்சோர்சிங் நகரங்களில் ஒரு முக்கிய இடத்தை இந்த நகரம் தற்போது பிடித்திருக்கிறது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் நடைபெற்ற நான்கு மாநாடுகளில் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்றது. ஏனென்றால், தமிழ்நாட்டின் தொழில் துறையினுடைய மிக முக்கிய தூண்களில் ஒன்று இந்தக் கோவை மாவட்டம் என்பதற்காகத்தான்.  கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கு, இந்த மேற்கு  மண்டலத்தின் தொழில் முன்னேற்றத்திற்கு, கோவை விமான நிலையத்தின் விரிவாக்கம் அவசியம் தேவை. இதனை உணர்ந்து, இந்த விமான நிலையத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான பணிகளை கருணாநிதி முதல்வராக இருந்தபோது  தொடங்கி வைத்தார். 

 இந்தப் பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டு, நில எடுப்புப் பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. கடந்த ஆட்சிக் காலத்தின் போது பத்தாண்டு காலமாக சரியான முன்னேற்றம் இல்லாமல் தொய்வடைந்திருந்த அந்தப் பணிகளை இப்போது முடுக்கிவிட்டு,  இதற்காக 1,132 கோடி ரூபாயை நாம் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.   இந்தப் பணிகள் மிக விரைவில் முடிக்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக, சென்னைக்கு அடுத்தபடியாக,  தமிழ்நாட்டின் தலைசிறந்த பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம் உயர்த்தப்படும் என்று நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். 

வளம்மிக்க இந்த மாவட்டத்தை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில்,  புத்தாக்கம், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்,  வான்வெளி மற்றும் பாதுகாப்பு, ஆராய்ச்சி   மற்றும் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய  மையமாக கோயம்புத்தூர் உருவாக்கப்படும். இதற்காக  தகுந்த ஆலோசகரை நியமித்து, விரிவான திட்டம் ஒன்று தயாரிக்கப்படும்.  கோவை நகரின் கட்டமைப்புத் தேவைகளுக்கான  எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய வகையில், இந்தப் பகுதிக்கான புதிய  பெருந்திட்டம் உருவாக்கப்படும்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரையில், 69 ஆயிரத்து 375 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளும் 2 லட்சத்து 25 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது மாநிலம் தொடர்ந்து தொழில் வளர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும். அது  மட்டுமல்ல, தொற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

தொழில்துறையில் சிறப்பு வாய்ந்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதில் சிறு குறு நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றக்கூடிய  இந்த நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு தனிக்கவனம் அளித்து வருகிறது.  மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் உலகம் முழுவதும் மூழ்கியுள்ளது. சிப் என்று அழைக்கப்படும் செமி-கண்டக்டர் இல்லாத மைக்ரோ எலக்ட்ரானிக் சாதனமே இல்லை என்றே சொல்லலாம்.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளின் அடிப்படையிலே உலகளவில் அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், செமி-கண்டக்டர்களின் தேவை முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் சிப் உற்பத்திக்கான  முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பினை மேலும் அதிகரிக்க வேண்டும்.  உங்களது தொழில் முயற்சிகள் அனைத்திற்கும், இந்த அரசு நிச்சயமாக உறுதுணையாக இருந்து, அனைத்து உதவிகளையும் செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து