முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளன் விவகாரத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவீர்களா? தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பதில்

சனிக்கிழமை, 21 மே 2022      அரசியல்
ks alagiri-2022-05-12

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார். அதில் கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும் கூட்டணிக்கும், அதற்கும் தொடர்பு இல்லை என அவர் தெரிவித்தார்.

சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் 31-ம் ஆண்டு நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கேரள மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "ராஜீவ்காந்தி தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரர். இந்தியர்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்யத் தயாராக இருந்தவர். ராஜீவ்காந்தி இறந்தபோது கண்ணீர் ஆறாக போனது. தற்போது கொலையாளிகளை விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்க்கும்போது இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வருகிறது. எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று கூறினார். 

குற்றம் செய்தவர்கள் தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர், குற்றவாளி என்பவர் குற்றவாளிதான், கடவுள் ஆக முடியாது என்றார். அவரிடம், பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுபவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வினர் தான். ஆகவே, தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பே எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் 7 பேர் விடுதலையை வலியுறுத்தினார்கள். கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டு தானே நாங்களும் கூட்டணி வைத்தோம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும் கூட்டணிக்கும், அதற்கும் தொடர்பு இல்லை என்று பதிலளித்தார் கே.எஸ்.அழகிரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து