முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் உர இருப்பு குறித்த ஆய்வு கூட்டம் : உழவர் நலத்துறை செயலாளர் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 28 மே 2022      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

Source: provided

சென்னை : சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குநரக அலுவலகத்தில்  உர  இருப்பு  குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் நடந்தது. 

கடந்த 24-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் மேட்டூர் அணை குறுவை பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்டது. மேலும், பரவலான மழை காரணமாக தென் மாவட்டங்களில் உள்ள நீர் தேக்கங்கள் முழுமையான கொள்ளளவினை எட்டியுள்ளன. இதன் காரணமாக வைகை அணை பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் குறுவைப் பருவப் பயிர் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், சுமார்  2  லட்சம் ஏக்கர் பரப்பில் கூடுதலாக குறுவைப் பருவ பயிர்கள் சாகுபடி செய்வதற்கான  சாதகமான  சூழல் தற்போது நிலவுகிறது. எனவே, குறுவைப் பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள மாவட்டங்களுக்கு, முன்னுரிமை அளித்து ரசாயன உரங்களை உரிய காலத்திற்குள் வழங்குவதற்கான ஆயத்த கூட்டமானது உர நிறுவனங்கள் மற்றும் வேளாண்மை துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர்  தலைமையில் நடைபெற்றது. இது குறித்து அவர் கூறுகையில்,

மே மாத பயன்பாட்டிற்காக 51,800 மெட்ரிக் டன் யூரியா,  28,850 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 2,300 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 48,400 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரத்தினை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.  ஒதுக்கீட்டின்படி உரங்களை குறைபாடின்றி முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், வேளாண்மை-உழவர் நலத்துறை வழங்கியுள்ள உத்தரவின்படி மொத்த உர ஒதுக்கீட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத உரத்தினை வழங்கும்படி தனியார் உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்  யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்கள் கூடுதல்  ஒதுக்கீடு பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இயற்கை உரம் பயன்பாட்டை அதிகரித்து, இரசாயன உரங்களை சரிவிகித அளவில் பயிர்களின்  தேவைக்கேற்ப பயன்படுத்தும்படி துண்டுப் பிரசுரங்கள், சுவர் விளம்பரங்கள் மற்றும் வாட்ஸ்அப் செய்தி மூலமும் விளம்பரப் பணிகள்  வேளாண்மைத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் தெரிவித்தார். 

இந்த ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் முனைவர் கே.வி.எஸ். குமார், இணை பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் (லிட்) உமா மகேஸ்வரி, மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர்கள் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் உர நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து