முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளரை தேர்வு செய்ய மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

புதன்கிழமை, 15 ஜூன் 2022      இந்தியா
Maumta-Banerjee 2022 06 15

Source: provided

புதுடெல்லி : எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும்பொருட்டு அதுகுறித்து ஆலோசனை நடத்த மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 16 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18-இல் நடைபெறுகிறது. இதில் நியமன உறுப்பினர்கள் தவிர எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏறத்தாழ 50 சதவீத வாக்குகள் உள்ளதாலும், அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், ஆளும்கட்சி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போட்டி வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில் இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அந்த வகையில், எதிர்க்கட்சி தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 22 கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அண்மையில் கடிதம் எழுதினார். அதில், ஜூன் 15-இல் டெல்லியில் கூடி, எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக டெல்லியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பிடிபி, ராஷ்ட்ரிய லோக்தளம், சிவசேனா, தேசிய மாநாட்டுக் கட்சி, ஜெ.எம்.எம். உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. ஆலோசனை கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இன்று 2-வது நாளாக நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி பொது வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்துள்ள கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து