முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘அக்னிபாத்’ திட்டத்திற்கான வயது வரம்பு 23 ஆக உயர்வு : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2022      இந்தியா
Rajnath 2022 02 22

Source: provided

புதுடெல்லி : ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பு 21 என்பதில் இருந்து 23 ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும், குறுகிய மற்றும் நிரந்தர அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறுகியகால அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் ஓய்வுபெறும் வயது வரையிலும் பணிபுரிய முடியும். குறுகியகால அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தனது பணிக்கால முடிவில் 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம். இந்திய ராணுவத்தில் தற்போது வரை இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14ம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான `அக்னிபாத்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசின் இந்தத் திட்டத்தை ஆதரித்தும் விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் 4  வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலையின்றி தவிப்பார்கள். இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளன.  அதோடு இந்த திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட 8 மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர். 

இந்நிலையில் இத்திட்டத்திற்கான வயது வரம்பு 21 என்பதில் இருந்து 23 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு வயது வரம்பை 21-ல் இருந்து 23 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது முதல் ஒரு வருடத்திற்கு மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து