முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எல் கிரிக்கெட்: நெல்லை 184 ரன்கள் குவிப்பு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      விளையாட்டு
tnpl-2022-06-23

Source: provided

நெல்லை, 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் பலப்பரீட்சை நடத்தின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. சூர்யபிரகாஷ் - சஞ்சய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு`184 ரன்கள் குவித்தது.

_______________

விராட் கோலிக்கு 

கபில்தேவ் அறிவுரை 

விராட் கோலி குறித்து கபில் தேவ் பேசியதாவது : கோலி அளவுக்கு நான் கிரிக்கெட் விளையாடியதில்லை. ஆனால் சில சமயங்களில் நீங்கள் போதுமான கிரிக்கெட் விளையாடாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வீரரின் ஆட்டம் குறித்து பேச நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது இல்லை. நாங்கள் கிரிக்கெட் விளையாடி உள்ளோம்., நாங்கள் விளையாட்டைப் புரிந்து கொண்டுள்ளோம். நீங்கள் ரன்கள் எடுக்கவில்லை என்றால், ஏதோ தவறு இருப்பதாக நாங்கள் உணர்வோம். 

நாங்கள் உங்கள் செயல்திறனை பார்க்கிறோம். நீங்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் பேட்டிங் மற்றும் உங்கள் விளையாட்டு திறன் தான் பேச வேண்டும் வேறு எதுவும் இல்லை. விராட் கோலி போன்ற ஒரு பெரிய வீரர் இப்படி சதம் அடிக்க சிரமப்படுவது மிகவும் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

_______________

15 வருடங்கள் நிறைவு:

ரசிகர்களுக்கு ரோகித் நன்றி

ரோகித் சர்மா 2007-ல் ஜூன் 23-ல் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்திய அணியின் 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் கேப்டனாக தற்போது ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 

34 வயதான ரோகித் சர்மா 2007-ல் இதே நாளில்தான் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்நிலையில் ரோகித் சர்மா தனது ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட்டை விரும்புவர்களுக்காக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில் ரோகித் கூறியதாவது:- சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் அறிமுகமாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறேன். இந்த பயணம் என் வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி இவ்வாறு அவர் கூறினார்.

_______________

லீசெஸ்டயர் அணிக்காக 

களமிறங்கும் 4 இந்திய வீரர்கள் 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி ( 151 ரன், 157 ரன்) பெற்றது. 3-வது போட்டியில் இங்கி லாந்து வெற்றியை (இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்) பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. 

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி லீசெஸ்டயர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்து இருந்தது. அதன்படி பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடைபெறும் இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற போராடுகிறார். ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டயர் அணிக்காக ஆடுகிறார்கள். 

_______________

டி - 20 பேட்டிங் தரவரிசை: 

தினேஷ் கார்த்திக் முன்னேற்றம்

37 வயதான தினேஷ் கார்த்திக் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். அணியின் தேர்வாளர்களின் வீரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார் அவர். அதற்கு காரணம் அவரது அபார பேட்டிங் திறன். 15-வது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இப்போது ஐசிசி பேட்டிங் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் 4 இன்னிங்ஸ் விளையாடி 92 ரன்களை எடுத்திருந்தார் அவர். அவரது ஸ்ட்ரைக் ரேட் 158.62. இந்த தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் இருப்பதும் அவர் தான். இந்நிலையில், டி20 பேட்டிங் தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். இதை ஐசிசி உறுதி செய்துள்ளது.

_______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!