முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதிநீக்க வழக்கில் ஜூலை 11-ம் தேதி வரை 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை : மகாராஷ்டிரா துணை சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 27 ஜூன் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் ஜூலை 11-ம் தேதி வரை 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் மகாரஷ்டிரா மாநில துணை சபாநாயகர் பதிலளிக்கவும், அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 

திடீர் போர்க்கொடி... 

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலர் ஆதரவுடன் அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

துணை சபாநாயகரிடம்... 

இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் நேற்று திங்கட்கிழமைக்குள் நோட்டீசுக்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. 

சுப்ரீம் கோர்ட்டில்... 

இந்தநிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் தரப்பு மனுவில், மகராஷ்டிரத்தில் சிவேசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவு திரும்பப் பெறப்படுவதாகவும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

11-ம் தேதி வரை... 

மனு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், துணை சபாநாயகரின் நோட்டீசுக்கு பதிலளிக்க ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கி இடைக்கால தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து